அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்

Go down

அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன் Empty அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்

Post by Admin Thu Aug 21, 2014 6:39 pm

அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்

- ஒரு அரிசோனன்


பொன்னம்பலத்துப் பிரகாரத்துக் கீழ்ச் சுவரில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கும் புடைப்புச் சிற்பங்களைக் [1] கவனிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார். சமணர்கள் கழுவேற்றப்பட்டதை காட்டும் சிற்பத்தைக் கண்டதும் அவர் முகம் சற்று சுருங்குகிறது.

“சை! இந்தச் சிற்பம் இங்கு இருக்கவேண்டுமா?” என்று அவரையும் அறியாமல் அவரது வாய் முணுமுணுக்கிறது.

“என்ன ஓய், சிவாச்சாரியாரே! எந்தச் சிற்பம் இங்கு இருக்கக் கூடாது என்று நீர் அருவருப்பு அடைகிறீர்?” என்ற சேக்கிழார் பெருமானின் குரல் அவரைத் திருப்பிப் பார்க்கச் செய்கிறது.
சிதமபரம் கோயில் சிற்பம்- சமணர் கழுவேற்றம்

சிதமபரம் கோயில் சிற்பம்- சமணர் கழுவேற்றம்

“வணக்கம், சேக்கிழார் பெருமானே! திடுமென்று தாங்கள் இங்கு எப்படி?” என்று இழுக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

“அது இருக்கட்டும், எந்தச் சிற்பம் உம்மை அருவருப்படையச் செய்தது? காண்பியும்!” என்று மீண்டும் கேட்கிறார் சேக்கிழார்.

சமணர்கள் கழுவேற்றப்படும் சிற்பத்தைக் காண்பிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

அதை உற்றுப் பார்த்த சேக்கிழார், “இந்தச் சிற்பம் இங்கு இருக்கக் கூடாது என்பதற்கு உம்முடைய தரப்புக் கருத்து என்னவோ?” என்று வினவுகிறார்.

“இறைவனின் அருளை வேண்டி அடியார்கள் குழுமும் புனிதமான இடம் இது! இதில் கொலைத் தொழிலைக் காட்டும் சிற்பம் தேவைதானா?”

“இது சரித்திரம் அல்லவா? காழிப் பிள்ளையாருடன் [2] அனல் வாது, புனல் வாது புரிந்து தோற்ற அமணர்கள் விரும்பிப் பெற்ற தண்டனைதானே இது? அவர்கள் சைவத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் இக்கதி ஏற்பட்டிருக்காதே?” என்று அச் சிற்பம் அங்கு இருப்பது பொருத்தமானதே என்ற தனது கருத்தை வெளியிடுகிறார் சேக்கிழார்.

“இது பாண்டியரை உயர்த்தும் சரித்திரம் அல்லவா? சோழ நாட்டில், அதுவும் கோவில் என்றாலே தில்லை என்று பெயர்பெற்ற, கூத்தபிரான் களிநடமாடும் பொன்னம்பலப் பிரகாரத்தில் பாண்டியர் புகழ் பாடவேண்டுமா? ஏதோ ஒரு பாண்டியச் சிற்பி யாரும் அறியாத வண்ணம் இச் சிற்பத்தைச் செதுக்கி விட்டது போலல்லவா இருக்கிறது!” பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தன் வாதத்தை வேறு பக்கம் திசை திருப்புகிறார்.

“உம் சோழ நாட்டுப் பற்றை நாம் மெச்சுகிறோம். சைவத்துக்கு வந்த இடர் எவ்வாறு நீக்கப்பட்டது என்ற வரலாற்றைத்தான் இச் சிற்பம் காட்டா நிற்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மன்னன், தான் சென்ற வழி தவறு என்று உணர்ந்து, நன்னெறிக்குத் திரும்பி வந்து, புறச் சமயத்தார் தாமே விரும்பிப் பெற்ற தண்டனையை நிறைவேற்றினான் என்றுதான் உலகுக்குக் காட்டுகிறது.

“ஆகவே, நீர் உமது நோக்கை விரிவுபடுத்தும். பாண்டியன் என்ற குறுகிய நோக்கை விடுத்து — தமிழன், அதுவும் தமிழ்ச் சைவனாகப் பிறந்து புறசமயத்தைத் தழுவிய அரசன் – சோழ இளவரசி ஒருவராலும், சோழ வளநாட்டில் அவதரித்த காழிப் பிள்ளையாராலும்தான் சைவத்திற்குத் திரும்ப ஈர்க்கப்பட்டு, அரசநெறியை நிறைவேற்றிய வரலாறு என்ற பெருநோக்குடன் இச்சிற்பத்தைக் கண்ணுற்றால் — இது சைவ நாயன்மார்களில் ஒருவரான — சோழ இளவரசியாகப் பிறந்து, பாண்டிமாதேவியாகப் பரிணமித்த மங்கையர்க்கரசியாரின் சைவத் தொண்டைச் சிறப்பிக்கும் சிற்பம் என்று உமக்குப் புரிய வரும். இது நாம் எழுதப் போகும் திருத் தொண்டர் புராணத்தின் ஒரு பகுதி என்றும் அறிந்து கொள்வீர்!” என்று விரிவுரை ஆற்றுகிறார் சேக்கிழார்.
பாண்டிய மன்னனுக்கும் மங்கையர்க்கரசியாருக்கும் ஆசி வழங்கும் ஞான சம்பந்தப் பெருமான்

பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனுக்கும்
சைவம் மீட்ட ராணி மங்கையர்க்கரசியாருக்கும்,
அமைச்சர் குலச்சிறையாருக்கும்
ஆசி வழங்கும் ஞானசம்பந்தப் பெருமான்

“பொறுமையுடன் எனது அறியாமையை அகற்றியதற்கு மிக்க நன்றி, சேக்கிழார் பெருமானே!” என்று குழைந்த பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், “தங்கள் வருகைக்கான காரணத்தை இன்னும் சொல்லவில்லையே?” என்று வினவுகிறார்.

“நாம்தான் அதைப்பற்றியும் கூறினோமே, நீர் கவனத்தைச் சிதறவிட்டிருக்கிறீரே! நீர் இந்தச் சிற்பத்தைப் பற்றித் தமக்குத் தாமே பேசி, அதற்கு நாம் விளக்கம் கொடுத்தபோது, இங்கு வந்ததற்கான காரணத்தைக் கூறிவிட்டோமே!” என்றதும், பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரின் முகம் மலர்கிறது.

“தாங்கள் இங்குதான் திருத்தொண்டர் புராணத்தை எழுத இருக்கிறீர்களா?”

“அம்பலவாணன் அடியெடுத்துக் கொடுத்து, அதை நாம் எழுதத் துவங்கவேண்டும் என்று மனதிற்குள் ஒரு வேண்டுதல். வாரும், இறைவன் முன்பு அமர்ந்து பேசுவோம்!” என்று அழைக்கிறார் சேக்கிழார்.

அவரை வரவேற்க வந்த தில்லை அந்தணர்கள் சிலரையும் அன்பு கலந்த புன்னகையுடன் தடுத்துவிடுகிறார். இருவரும் சற்றுத்தள்ளி, நடராஜரின் திருஉருவம் கண்ணில் படும், அதே சமயம் மனித நடமாட்டம் குறைவான இடத்தில் அமர்ந்து கொள்கிறார்கள்.

“ஓய், சிவாச்சாரியாரே! நீரும் நானும் ஒன்றையேதான் விரும்புகிறோம். தமிழ் என்றும் அழியாமல் எல்லோராலும் பேசப்படவேண்டும், தமிழ் மறைகள் அனைவராலும் ஓதி உணரப்படுதல் வேண்டும் என்பதுதான் அது. அநபாயச் சோழரும் அதற்காகவே திருத்தொண்டர் புராணம் எழுதி முடிக்கும்வரை தில்லையிலேயே இருக்கும்படி என்னைப் பணித்துவிட்டார்.

“உமக்குத் தமிழில் இருக்கும் ஆர்வம் நான் அறியாததல்ல. எனவே, உம்மையும் தமிழையும், சைவத்தையும் ஒருங்கே வளர்க்கும் இப்பணியில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். ஆகையால், திருத்தொண்டர் புராணம் எழுதுவதற்கு நீர் ஒரு உதவி செய்யவேண்டும்!” என்று சேக்கிழார் சொன்னதும், “சேக்கிழார் பெருமானே! இதைவிடப் பெரும் பேறு, வேறு என்ன எனக்குக் கிடைக்க இருக்கிறது? தாங்கள் திருவாய் மலர்ந்து அருளுங்கள்!” என்று பணிவாகப் பதிலிறுக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

“நீர்தான் எனது எழுத்தராக இருக்க வேண்டும்!”
சேக்கிழார் பெருமான்

சேக்கிழார் பெருமான்

“பெரும் பேறு பெற்றேன் பெருமானே! திருத்தொண்டர் புராணத்தைத் தங்கள் வாயிலாக முதன்முதலாகச் செவியுறும் நல்வாப்பு யாருக்குக் கிடைக்கும்? அதையும் தாங்கள் சொல்லச் சொல்ல நானே எழுதுவது என்றால்… என் மயிர்க்கால்கள் புல்லரிக்கின்றன!” பாகாய்க் கரைகிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

அருகில் நிற்கும் பணியாளரைப் பார்த்து சேக்கிழார் சைகை செய்கிறார். பணியாளர் தான் வைத்திருக்கும் ஒரு துணிக்கட்டை பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரிடம் கொடுக்கிறார். சேக்கிழாரின் தலை அசைப்பைக் கண்ணுற்று, பணியாளர் இவர்கள் பேச்சு தன் காதில் விழாத தூரத்தில் நின்று கொள்கிறார்.

“ஓய், சிவாச்சாரியாரே! பதனிடப்பட்ட பனை ஓலைகளும், நல்ல எழுத்தாணியும் இத்துணிக்கட்டில் உள்ளன. எனவேதான் இதை உம்மிடம் கொடுக்கச் செய்தோம். முதல் அடி எடுத்துக் கொடுக்கும்படி அம்பலவாணனை இறைஞ்சிக் கொண்டிருக்கிறேன். அவர்தான் கருணை காட்டவேண்டும்!” என்று பயபக்தியுடன் சொல்கிறார்.

“கட்டாயம் நடக்கும், பெருமானே! அவருடைய நாயன்மார்களைப் பற்றி அல்லவா தாங்கள் திருமுறை எழுதப் போகிறீர்கள்! கட்டாயம் அம்பலவாணர் அடி எடுத்துக் கொடுப்பார்!” பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரிடமிருந்து பரவசத்துடன் பதில் வருகிறது.

அப்பொழுது நடராஜருக்குத் தீபாராதனை நடக்கிறது. அந்த ஒளியில் அவரது திருஉருவம் தகதகவென்று மின்னுகிறது. இருவரும் எழுந்து நிற்கிறார்கள்.

“அவனது ஒளியைப் பாரும். அவனது தலையில் மின்னும் பிறை நிலாவைக் காணும். அவன் தலையில் தரித்துக் கொண்டிருக்கும் கங்கையைக் கவனியும். இம்மாதிரியான சோதியை நான் இதுவரை கண்டதே இல்லை. எப்படி ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறான்! அவனது சிலம்பு அணிந்த திருவடிகள்தான் நமக்கு எப்படித் தரிசனம் கொடுக்கின்றன! நோக்கும்!” என்று சேக்கிழார் சொல்லி முடித்தவுடன் அவர்களைச் சுற்றிப் பல இடங்களில் கோவில் மணிகள் ஒலிக்கின்றன.

திடுக்கிட்டுத் திரும்பிய சேக்கிழார் சுற்றுமுற்றும் பார்க்கிறார். மணி ஓசையில் அவரது மனமும், இதயமும், சிந்தனையும் லயிக்கின்றன. மெல்ல அவரது முகம் மலர்கிறது. தலையை ஆட்டி ஆட்டி ரசிக்கிறார். கையை உயர்த்தி, நடமிடும் நாயகனான நடராஜனை நோக்கிக் கூப்புகிறார்.

“கேட்டீரா, ஓய்? அம்பலவாணன் அடி எடுத்துக் கொடுத்துவிட்டான்! திருத்தொண்டப் புராணத்திற்கு முதல் அடியைக் கூறிவிட்டான்! தனது கோவில் மணிகளின் ஒளியின் மூலமாக முதல் அடி எடுத்துக் கொடுத்து, என் அடியார்களின் புகழைப் பாடு, என்னை எழுது, திருமுறையாக எழுது என்று ஊக்குவிக்கிறானே! உமது காதில் அது விழுகிறதா?” என்று ஆனந்தப் பரவசத்துடன் கேட்கிறார் சேக்கிழார்.

“பெருமானே! என் காதில் கோவில் மணிகள் ஒலிக்கும் சத்தம்தான் கேட்கிறது. வேறொன்றும் கேட்கவில்லையே! இறைவன் கோவில் மணிகள் மூலம் தங்களுக்குப் பகிர்வது தங்களது தவப் பயன்! என்மாதிரி ஒன்றுமில்லாத ஞானசூனியனுக்கா அதை உரைப்பான்?” என்று குறைப்பட்டுக் கொள்ளுகிறார்.

“கவனமாகக் கேளும், ஓய்! உமாமகேசனின் உரை உமக்கும் ஒலிக்கும்! அவனது மணிகளின் ஒலியை நன்றாகக் கவனித்துச் சொல்லும், ஓய்!” என்று பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரை உற்சாகத்துடன் தூண்டுகிறார்.

“அப்படியே!” என்று பயபக்தியுடன் கேட்ட பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், “டாண், டாண் என்றுதான் கேட்கிறது.” என்கிறார்.

“மேலெழுந்தவாரியாகக் கேட்காதீர்! உற்றுக் கவனியும். மணிகள் அடித்த பிறகு எழும் அதிர்வுகள் என்ன சொல்கின்றன என்று உட்சென்று கவனியும்!”

கண்களை மூடிக்கொண்டு கவனத்தை மணியோசைகள்பால் செலுத்துகிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.
சிதம்பரம் ஆடல்வல்லான்

சிதம்பரம் ஆடல்வல்லான்

“டாண், டாண் என்று ஒலி எழுப்பிய பின்பு மணிகளிலிருந்து, ஓம், உம், கெம், ஓம், லம், லாம், லாம், கெம், என்று பலவாறு அதிர்வுகள் கிளம்புகின்றன. எனக்கு சொற்கள் ஒன்றும் விளங்கவில்லையே?” என்று இறைவனின் சொல்லை அறிய இயலாத ஆதங்கத்துடன் சேக்கிழாரை வினவுகிறார்.

“அதேதான், அதேதான்!” என்று உற்சாகத்துடன், உவகையுடன் சொல்கிறார் சேக்கிழார். “நானும் நீர் கெட்ட ஒலி அதிர்வுகளைத்தான் கேட்டேன். மணி ஓசையின் அதிர்வு எப்போதும் ஓம் என்று பிரணவ ஒங்காரத்துடன்தான் முடியும். ஒவ்வொரு மணிக்கும் தனிப்பட்டதான அதிர்வு உண்டு. ‘ம்’ என்ற ஒலியை முடிவாக வைத்துக் கொள்வோம். நீர் கேட்ட பல அதிர்வுகளை எழுத்துக்கள் என்று வைத்துக்கொண்டு, ‘ம்’ என்ற பிரணவ மந்திரத்தின் ஒலியை எடுத்து விட்டோமானால், மிஞ்சும் ஒலிகளை ‘உ’, ‘ல’, ‘கெ’, ‘லா’, என்று வரிசைப் படுத்தலாம். பிரணவத்தின் ‘ம்’ கடைசி ஒலியானால், ‘உலகெலாம்’[3] என்ற சொல் நமக்கு அம்பலவாணனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது, பார்த்தீரா!” என்ற சேக்கிழாரின் விளக்கத்தைக் கேட்டு அயர்ந்துவிடுகிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

ஆடலழகனான ஆனந்த சபேசன் தன் அலகிலா விளையாட்டை நிகழ்த்திய நேர்த்தியை எண்ணி உள்ளம் பூரிக்கிறார். உற்சாகத்துடன் மேலும் தொடர்கிறார் சேக்கிழார்.

“நமக்கு இறைவனார் எடுத்துக் கொடுத்த ‘உலகெலாம்’ என்ற சொல்லை வைத்துக்கொள்வோம். சற்றுமுன் அவனது தரிசனத்தைப் பற்றி வர்ணித்தேன். அதை வைத்து முதல் செய்யுளைச் சொல்கிறேன், எழுதிக்கொள்ளும்.” என்று பரபரக்கிறார். உடனே துணிக்கட்டை அவிழ்த்து, ஓலைகளையும், எழுத்தாணியையும் தயாராக வைத்துக்கொண்டு தலை அசைக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

சேக்கிழார் மெய்மறந்து துவங்குகிறார்…

“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவுலாவிய நீர்மலி மேனியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!

“உலக மக்கள் அனைவரும் இறைவன் தங்களுக்குள் இருக்கிறான் என்பதை உணர்ந்து அவனைத் துதி பாடிவர வல்லவன், அவனது தலை முடியில் புனித நீரைப் பொழியும் கங்கை இருக்கிறாள், பிறை நிலா அதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அவனிடமிருந்து எழும் ஜோதிக்கு எதையும் ஒப்பிட்டுச் சொல்ல இயலாது. அவன் தில்லையில், பொன்னம்பலத்தில் என்றும் ஆடிக்கொண்டிருப்பவன், அவனது மலர்போன்ற, ஆனந்த தாண்டவம் ஆடும்போது ஒலிக்கின்ற, சிலம்புகள் அணிந்த திருவடியை வாழ்த்தி வணங்குவோமாக!” என்று முடிக்கிறார்.

“ஆகா, ஆகா, அருமை! அருமை!” என்று ரசித்தவாறே முதற் செய்யுளை எழுதி முடிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

கவிதை வெள்ளம் சேக்கிழாரிடமிருந்து அருவியாகப் பெருக்கெடுக்கிறது. திருத்தொண்டர் புராணம் உருப்பெறுகிறது.
Admin
Admin
Admin

Posts : 36
Join date : 17/10/2013

https://thamilinimai.forumieren.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum